மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று நாள் பயணமாக இன்று (23.10.2021) ஜம்மு காஷ்மீர் செல்லவுள்ளார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பிறகு, அவர் ஜம்மு காஷ்மீருக்கு மேற்கொள்ளவிருக்கும் முதல் பயணம் இதுவாகும்.
ஜம்மு காஷ்மீரில் இம்மாதம் மட்டும் 11 பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் கடும் மோதல் நடைபெற்றுவருகிறது. இந்தச் சூழலில், அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்குச் செல்வதால், அங்கு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா தங்கவிருக்கும் ஸ்ரீநகர் ஆளுநர் மாளிகையைச் சுற்றி 20 கிலோமீட்டருக்கு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் முக்கியமான இடங்களில் குறிபார்த்து சூடும் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஸ்ரீநகரில் சந்தேகத்துக்கு இடமான செயல்பாடுகள் நடைபெறுகிறதா என்பதை ட்ரோன்கள் மூலம் பாதுகாப்பு படைகள் கண்காணிக்க தொடங்கியுள்ளன.
தால் ஏரி மற்றும் ஜீலம் ஆறு ஆகியவை மோட்டார் படகுகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளன. மேலும், 700க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் செல்லும் அமித் ஷா, அங்குள்ள பாதுகாப்பு சூழ்நிலையை ஆராயவுள்ளார். மேலும், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பொதுமக்களின் குடும்பத்தினரையும் அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.