அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டினை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்குக் கிடைத்துள்ளது. மாநாட்டைச் சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றார்.
ஜி20 ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் முதல்வர்கள் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் ஜி20 கூட்டமைப்பை எப்படி வலுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஜி 20 மநாடு மற்றும் அது தொடர்பாக நடக்கும் நிகழ்ச்சிகளுக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், “அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி' ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல நமது பிரதமர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியா ஜி-20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள கருத்தரங்குகளுக்குத் தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் உறுதியளிக்கிறேன். காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக இந்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கையாளவும் 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை (SPV) உருவாக்கியுள்ளோம். உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுவோம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் வாய்ப்புக்காகப் பிரதமருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.