நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன சட்டம் குறித்துச் சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மத்திய உள்துறை அமித்ஷா பேசியது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று (19.12.2024) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.
அதே சமயம் பாஜகவினரும் போட்டி போராட்டம் நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தனது மண்டை உடைந்ததாக பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சாரங்கி குற்றம் சாட்டியிருந்தார். மேலும் பாஜகவைச் சேர்ந்த மற்றொரு எம்.பி.யான முகேஷ் ராஜ்புத்துக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆர்.எம்.எல். மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது தொடர்பாக பாஜகவினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே நாடாளுமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய சர்ச்சை கருத்துக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (20.12.2024) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார். அப்போது அவர்கள், ‘அமித்ஷா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினர். அதே வேளையில் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமரியாதை செய்ததாகக் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.