அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்கா நீதிமன்ற நீதிபதி, அதானி லஞ்சம் கொடுக்க சம்மதித்தது உண்மை தான் என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து, அதானிக்கு பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டார். அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்திருப்பதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் அதானியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என தற்போது நடைபெற்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட இந்தியா கோரிக்கை வைத்து பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா பிரிவு, அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சி ஆகிய கட்சிகள், அதானி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்காமல் இருக்கிறது. இந்த நிலையில், அதானி விவகாரத்தை காங்கிரஸ் கைவிட வேண்டும் என சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75வது ஆண்டு எட்டியதைக் குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த விவாதத்தில் பேசிய சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் எம்.பி, “அரசியலமைப்பு அமைப்பில் பாராளுமன்றத்திற்கு முக்கிய இடத்தை அரசியலமைப்பு வழங்கியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, பல சமயங்களில் அது ஒரு அரசியல் போர்க்களமாக மாற்றப்பட்டதை நாம் அனுபவிக்கிறோம். தனிப்பட்ட கருத்துக்களால் நாடாளுமன்றம் பலமுறை ஒத்திவைக்கப்படுகிறது.
ஒரு அரசியல் தலைவர் கார்ப்பரேட் நிறுவனத்துடன் என்ன உறவு வைத்திருக்கிறார், எந்தத் தலைவர் யாருடைய விமானத்தில் எங்கே போனார், எந்த வெளிநாட்டுத் தலைவர் உள்ளூர் தலைவருக்கு நன்கொடை அளித்தார் என்பதை விட இங்கு நம் விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறதா? இல்லையா? என்பதில்தான் நாம் அக்கறை கொள்ள வேண்டும். நாங்கள் தேசிய நலன் சார்ந்த பிரச்சனைகளை விவாதிக்க விரும்புகிறோம், அரசியல் முழக்கங்களை அல்ல. இதை அரசாங்கமும், எதிர்க்கட்சியும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று பேசினார். இவருடைய கருத்தை, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் எம்.பியும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே, ஆமோதித்தார்.
ஏற்கெனவே, இந்தியா கூட்டணியில் தலைமை வகிக்க மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கையில் எடுத்த அதானி விவகாரத்திற்கு அந்த கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் ஓரங்கட்டப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.