இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவந்த நிலையில், இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்பட்டன. இந்நிலையில், இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இதனையடுத்து தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை இந்தியத் தொல்லியல் துறை இன்று மீண்டும் திறந்துள்ளது. அதன்படி இன்று முதல் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் சுற்றிப்பார்க்க சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆக்ரா மாவட்ட மாஜிஸ்ட்ரேட், "தாஜ்மஹாலுக்குள் ஒரே நேரத்தில் 650க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆன்லைன் வழியாக மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். ஒரு தொலைபேசி எண்ணில் ஐந்து டிக்கெட்டுகளுக்கு மேல் பதிவு செய்யமுடியாது. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.