இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலருக்கு காய்ச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டு, சில நாட்களில் குணமாகிவிடுகிறது. இதற்கிடையே கரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட முதல் மரணத்தை இந்தியா நேற்று (15.06.2021) உறுதிசெய்தது.
நோய்த்தடுப்பு மருந்துகளால் தொடர்ந்து ஏற்படும் பாதகமான நிகழ்வுகளைக் கண்காணிக்கும் குழு, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு கடுமையான பாதிப்புக்குள்ளான 31 வழக்குகளை ஆய்வுசெய்தது. இந்த ஆய்வில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மூவருக்கு அனாபிலாக்ஸிஸ் என்ற கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டதாக அந்தக் குழு கூறியுள்ளது. அந்த மூவரில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் பாதகமான நிகழ்வுகளை ஆய்வுசெய்யும் அரசின் குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கீழ் செயல்படும் கரோனா பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோராவிடம் கரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட மரணம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், "கரோனா தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தப்பட்ட முதல் மரணம் இதுவாகும். இது அனாபிலாக்ஸிஸ் (கடுமையான ஒவ்வாமை) பாதிப்பால் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தடுப்பூசி மையத்தில் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இது மீண்டும் வலியுறுத்துகிறது. பெரும்பாலான அனாபிலாக்டிக் எதிர்வினைகள் இந்தக் காலகட்டத்தில் நிகழ்கிறது. உடனடி சிகிச்சையானது இறப்புகளைத் தடுக்கும்" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கரோனா தடுப்பூசிக்குப் பிறகான மரணங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “23.5 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்ட நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு இறந்தவர்களின் எண்ணிக்கை 0.0002 சதவீதம் ஆகும். கரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதம் 1 சதவீதத்திற்கும் அதிகமாகும். மேலும், கரோனா தடுப்பூசியால் இந்த இறப்புகளைத் தடுக்க முடியும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம். எனவே கரோனா பாதிப்பால் இறக்கும் அபாயத்தைக் காட்டிலும் கரோனா தடுப்பூசியால் உயிரிழக்கும் அபாயம் மிகவும் குறைவு” என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு ஏற்படும் அனைத்து மரணங்களுக்கும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிகழ்வுகளுக்கும் தடுப்பூசியே காரணம் என கருத முடியாது எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.