உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை வாங்கியது. அதன் பிறகு தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் ‘பி.எஃப்.7’ என உருமாறி அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவிலும் புது வகை கொரோனா பரவல் தொடர்பான அச்சம் மேலோங்கி வரும் நிலையில், மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் காரணமாக மாநிலங்களில், குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் தீவிரக் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் புதுவகை கொரோனா பரவலைத் தடுப்பதில் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தது என சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரும் ஜனவரி மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா அலை ஒன்று, இரண்டு ஆகியவற்றின் போக்குகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வகை கொரோனா மனிதர்களிடையே தொற்றும் விகிதம் அதிகமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்பிருந்த கொரோனா தொற்றுகள் ஒருவரிடம் இருந்து சராசரியாக 5 முதல் 6 பேருக்கு பரவும் வேகத்தைக் கொண்டிருந்த நிலையில், தற்போது பரவி வரும் புது வகை ‘பி.எஃப்.7’ கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 10 முதல் 18 பேருக்கு பரவும் எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.