'ஒமிக்ரான்' தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்தியப் பிரதேச மாநில அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
'ஒமிக்ரான்' பரவலைத் தடுக்கும் வகையில் மத்தியப் பிரதேசத்தில் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார். உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதுவரை யாருக்கும் 'ஒமிக்ரான்' பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும், அத்தொற்று அதிகம் பாதித்த மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருவோரால் தொற்று பரவல் அபாயம் உள்ளதாகவும், எனவே இரவு நேர ஊரடங்கைப் பிறப்பிப்பதாகவும் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
நாடெங்கும் 'ஒமிக்ரான்' தொற்று அதிகரிக்க தொடங்கிய பின் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் 'ஒமிக்ரான்' பரவலைத் தடுக்க கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களின் போது, கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை, அம்மாநில அரசு இன்று அறிவிக்க உள்ளது.
இதற்கிடையே, நாடெங்கும் 'ஒமிக்ரான்' பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து, அனைத்து மாநில சுகாதாரத்துறைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார்.