Skip to main content

இந்தியாவில் அதிகம் பரவும்  ஒமிக்ரானின் துணை மாறுபாடு!

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக மூன்று லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து நாட்டில் நிலவும் கரோனா சூழல் குறித்து விளக்கமளித்தார்.

 

செய்தியாளர் சந்திப்பில் லாவ் அகர்வால் கூறியதாவது; நாட்டில் இதுவரை 95 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 74 சதவீதம் பேருக்கு  இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. 97.03 லட்சம் தகுதியான நபர்களுக்கு பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நாட்டில் கரோனா உறுதியாகும் சதவீதம் கிட்டத்தட்ட 17.75 சதவீதமாக இருந்தது. 11 மாநிலங்களில் 50,000 மேற்பட்டவர்கள் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 14 மாநிலங்களில் 10,000 ஆயிரத்திலிருந்து 50,000 நபர்கள் வரையும், 11 மாநிலங்களில் பத்தாயிரத்திற்கும் குறைவானவர்களும் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.

 

கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோரும், ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரும் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சம்பந்தமாக நாங்கள் மாநிலங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். ஜனவரி 26 நிலவரப்படி, 551 மாவட்டங்களில், கரோனா உறுதியாகும் சதவீதம் 5-க்கும் மேல் இருக்கிறது.

 

கடந்தாண்டு மே மாதம் 7 ஆம் தேதி, கரோனாவின் இரண்டாவது அலையின் உச்சத்தில் இருந்தபோது, ஒரேநாளில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கரோனா உறுதியானது. 3679 உயிரிழப்புகள் ஏற்பட்டன. 3% பேருக்கு மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. 21 ஜனவரி 2022 அன்று, 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கரோனா உறுதியானது. 435 இறப்புகள் பதிவானது. 75 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.

 

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குநர், நாட்டில் ஒமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2 இப்போது இந்தியாவில் அதிகம் பரவி வருவதாகக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்