கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி அன்று ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய பெரும் விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரைத்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், தவறாக சிக்னல் கொடுக்கப்பட்டது தான் இரயில் விபத்துக்கு காரணம் என ஐந்து உயர் அதிகாரிகளை தென்கிழக்கு ரயில்வே பணியிடை நீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று ஹவுராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்துக்கு பலக்னுமா எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் ஹைதராபாத் அருகே உள்ள பொம்மைப்பள்ளி மற்றும் பகிடிப்பள்ளி இடையேயான வழித்தடத்தில் வந்தபோது ரயிலின் மூன்று பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர்.
ரயில் தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்தில் ரயிலில் பயணம் செய்த பயணிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தெற்கு மத்திய ரயில்வேக்கு பெயர் அறியப்படாதவரிடமிருந்து ஒரு கடிதம் வந்ததுள்ளது. அந்த கடிதத்தில், ‘டெல்லி - ஹைதராபாத் வழித்தடத்தில் அடுத்த வாரம் பாலசோர் போன்ற ரயில் அசம்பாவிதம் நிகழும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை மத்திய ரயில்வே அதிகாரிகள் காவல்துறையினரிடம் கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ரயில் விபத்து நடந்து வரும் சூழலில் இந்த கடிதம் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.