ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து உலக அளவில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் பல்வேறு கட்டங்களாக மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது சிபிஐ விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை சந்திக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, "ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஒடிசா அரசும் மேற்கு வங்க அரசு இணைந்து செயல்படுகின்றன. விபத்தில் சிக்கியவர்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் சிக்கி இறந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 103 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 97 பேர் சிகிச்சையில் உள்ளனர். 31 பேரை காணவில்லை. நிறைய பேர் இறந்துள்ளனர். இந்த விபத்து பற்றிய உண்மை வெளிவர வேண்டும். நாம் மக்களுக்காக உழைக்க வேண்டும். நாம் மக்களுடன் இருக்க வேண்டும். இந்த ரயில் விபத்து குறித்த உண்மை வெளிவர வேண்டும். விபத்து பற்றிய உண்மையை மறைக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.