ஆறு கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், நாளை மறுநாள் (01-05-24) நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. அதனால், அம்மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியையும், அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வி.கே.பாண்டியனை பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில், பா.ஜ.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ஒடிசா மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆளலாமா?’ என்றும் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக வி.கே.பாண்டியனை நியமிக்க பார்க்கிறார் எனக் கூறி கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதற்கிடையில், பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பேசிய போது, அவரின் கை நடுங்குவதைக் கண்ட வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக்கின் கையை மறைத்து வைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து, பா.ஜ.கவைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஷ்வா சர்மா, ‘நவீன் பட்நாயக்க்கின் கைகளைக்கூட வி.கே.பாண்டியன் தான் கட்டுப்படுத்துகிறார்’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்து விமர்சனம் செய்தார்.
அதே போல், ஒடிசா மாநிலம். பரிபாடா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசிய போது, “ நீண்ட நாட்களாக நவீன் பட்நாயக்குடன் நெருங்கிப் பழகியவர்கள், அவரது உடல்நிலை மோசமடைந்ததற்கு பின்னணியில் சதி இருக்கலாம் என நம்புகின்றனர். ஒடிசாவில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால், பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு குழுவை அமைக்கும்” என்று கூறினார். இது பெரும் சர்ச்சையானது.
இதனையடுத்து, பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு பதிலளித்த ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், “பிரதமர் மோடிக்கு எனது உடல்நிலையில் அவ்வளவு அக்கறை இருந்தால், அவர் தொலைபேசியை எடுத்து என் உடல்நலம் பற்றி விசாரிக்க வேண்டியது தானே?. தேர்தல் நேரத்தில் வாக்குகளைச் சேகரிக்க மட்டுமே இது போல் அவர் பேசி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் உள்ளவர்களால் இந்த வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. என் உடல்நிலை சரியாக உள்ளது” என்று கூறினார்.
இந்த நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இன்று (30-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், வி.கே பாண்டியன்தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “இது அபத்தமானது, நான் முன்பு அடிக்கடி கூறியுள்ளேன். இது பழைய குற்றச்சாட்டு, அதில் எந்த ஆதாரமும் இல்லை. பிஜேடி தலைவர் பாண்டியனை எனது வாரிசாகச் சுற்றி வரும் பேச்சுக்கள் மிகைப்படுத்தப்பட்டவை. இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாட்டில் அவர்களின் புகழ் குறைந்து வருவதால், அவர்கள் மேலும் மேலும் அவநம்பிக்கை அடைந்து வருவதை நான் காண்கிறேன். அரசியல் வாரிசை மாநில மக்கள் முடிவு செய்வார்கள் என்று பலமுறை கூறி வந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.