மகாராஷ்டிரா மாநிலம், அமராவதியில் நடைபெற்ற மருந்துக் கடைக்காரர் கொலை வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமையின் தலைமை இயக்குநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் தையல்காரர் கொல்லப்பட்டது தொடர்பான, வழக்கு விசாரணையின் விவரங்களையும், அவர் எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி விவாதத்தில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துகளை தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவருக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நுபுர் சர்மாவின் செயலுக்கு எதிராக உச்சநீதிமன்றமும் கருத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்தச் சூழலில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்ட மகாராஷ்டிரா மாநிலம், அமராவதியைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரர் உமேஷ் போன்டே, கடந்த ஜூன் மாதம் 21- ஆம் தேதி அன்று கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கால்நடை மருத்துவர் யூசுப் கான், கொலை செய்யப்பட்ட உமேஷ் போன்டேவின் நண்பர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான இஃர்பான் கானை காவலில் எடுத்து விசாரிக்க ஜூலை 7- ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஆறு பேர் அமராவதி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் அமராவதி சென்று விசாரித்து வருகின்றனர்.
உதய்ப்பூர் தையல்காரர் கொலைக்கும், இதற்கும் நிறைய ஒற்றுமை இருப்பதால், இவ்விரு கொலைகளில் வெளிநாட்டு அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த தேசிய புலனாய்வு முகமை தலைமை இயக்குநர் இவ்விரு கொலைகள் தொடர்பான விசாரணை விவரங்களை எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.