சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் இருந்து வருகிறார். மாநிலத்தில் கல்வியின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்து இருந்தார். இதையடுத்து நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு செய்து வந்தது.
இந்நிலையில் தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற பிற்படுத்தப்பட்ட பழங்குடியின குழந்தைகளுக்காக ஹெலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 88 மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பிரேம்சாய் சிங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “10 மற்றும் 12வது படிக்கும் குழந்தைகள் பொதுத்தேர்வில் முதல் 10 இடங்களுக்குள் வந்தால் ஹெலிகாப்டரில் பயணம் செய்யலாம் என முதல்வர் பூபேஷ் பாகேல் உறுதியளித்தார். அதன்படி இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.