கர்நாடக பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த எடியூரப்பா கடந்த ஜூலை மாத இறுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் புதிய முதல்வர் ஆனார்.
இந்தநிலையில், கர்நாடக அமைச்சர்களில் ஒருவரான கே.எஸ். ஈஸ்வரப்பா, தனது சக அமைச்சரான முருகேஷ் நிராணி விரைவில் முதல்வர் ஆவார் என தெரிவித்தார். இது அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கர்நாடக முதல்வரை மாற்ற எந்தத் திட்டமும் இல்லை என மறுத்தார்.
இந்தச் சூழலில் அண்மையில் முருகேஷ் நிராணி, “பசவராஜ் பொம்மை அவரது தந்தையைப் போல மத்திய அமைச்சர் ஆகலாம்” என தெரிவித்தார். இதனால் பாஜக கர்நாடக முதல்வரை மாற்றலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் பின்னர் இதுதொடர்பாக விளக்கமளித்த முருகேஷ் நிராணி, பசவராஜ் பொம்மை தற்போது மத்திய அமைச்சர் ஆவர் என தான் கூறவில்லை என்றார்.
இந்நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை, தனது சொந்த தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். பேச்சின் நடுவே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்திய அவர், "எதுவுமே நிரந்தரம் இல்லை. இந்த வாழ்க்கையே நிரந்தரம் இல்லை. நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பது நமக்குத் தெரியாது. இத்தகைய சூழலில் அதிகாரமிக்க பதவிகளும் நிரந்தரமானவை அல்ல. இதுகுறித்து நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றார். இது கர்நாடகாவில் விரைவில் முதல்வர் மாற்றம் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.