
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் கல்லூரி மாணவி, இளம்பெண் என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கேரளாவில் மற்றொருபுறம் நிஃபா வைரஸ் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கேரள தமிழக எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநரும் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர். அப்பொழுது நிஃபா வைரஸ் பரவல் குறித்து தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''சுகாதாரத் துறையால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாம் சொல்ல இருக்கிறோம். எனவே பயப்பட வேண்டாம். இந்த மாதிரியான அறிகுறிகள் யாருக்கும் இல்லை. அதே நேரத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம். ட்ரெயினை நிறுத்துவது, லாக்டவுன் போடுவது போன்ற பீதியை ஏற்படுத்தும் சூழ்நிலை இல்லை. மத்திய சுகாதாரத்துறையும் அப்படி சொல்லவில்லை. எனவே மக்களுக்கு நாம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.