இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கி நடைபெற்றுவருகிறது. எதிர்க்கட்சிகள் அமளி, 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம், நாடாளுமன்ற வளாகத்திற்குள் எம்.பி.க்கள் போராட்டம் என மழைக்கால கூட்டத்தொடரைப் போலவே இந்தக் கூட்டத்தொடரிலும் பரபரப்பு நிலவிவருகிறது.
இந்தநிலையில் மக்களவையில், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், குடியுரிமை திருத்தச் சட்டம் 10.01.2020 அன்று அமலுக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளதோடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் வருபவர்கள், அந்தச் சட்டத்தின் கீழ் விதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
அதேபோல், தேசிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) தயார் செய்வது குறித்து எந்த முடிவையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.