இளங்கலைப் நீட் தேர்வில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் நீட் மறுதேர்வு நடத்தப்படாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கருணை மதிப்பெண் வழங்கியது; ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்துள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மாணவர்கள் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இதில் சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட பல மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நீட் மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில் நீட் மறு தேர்வு நடத்தப்படாது என உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வின் முழுமையான அடிப்படையான விஷயங்களை மாற்றி அமைக்கக்கூடிய மற்றும் பழுதாக்கும் வகையில் இந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவைப் பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி, பீகார் மாநிலத்தில் ஒரு சில இடங்களிலும், குஜராத்தில் ஒரு சில இடங்களிலும் நீட் வினாத்தாள் கசிவு நிகழ்ந்திருப்பதை எங்களால் பார்க்க முடிகிறது. ஆனால் அது ஒட்டுமொத்தமாக பாதித்துவிட்டது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே நீட் மறு தேர்வு நடத்துவதற்கான சூழல் இல்லை. அதேபோல நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவுக்கு போதிய முகாந்திரமும் இல்லை எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளார்.