Skip to main content

நம்பிக்கை வாக்கெடுப்பு; நிதிஷ்குமார் அரசு வெற்றி!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Nitishkumar government win on vote of confidence

பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ்குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்து விலகியதுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே (28.01.2024) பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து, பீகார் மாநில சட்டசபையில், முதல்வர் நிதிஷ்குமார் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீதான வாக்கெடுப்பு இன்று (12-02-24) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, பா.ஜ.க. 78, ஐக்கிய ஜனதா தளம் 45, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 4, ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. என பாஜக கூட்டணி அரசுக்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார். 

243 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டப்பேரவையில் இன்று (12.02.2024) நடைபெற்றது. அதில், பா.ஜ.க - 78, நிதிஷ்குமாரின் ஜே.டி.யூ - 45, ஹெச்.ஏ.எம்.எஸ் - 4 என நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக 127 வாக்குகள் பெறப்பட்டன. மேலும், ஆர்.ஜே.டி -79, காங்கிரஸ் -19, இடதுசாரி - 16 என எதிர்க்கட்சிகளுக்கு 112 வாக்குகள் பெறப்பட்டன. இதன் மூலம், நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

சார்ந்த செய்திகள்