
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு தளர்வுகளை பொதுமக்களுக்கு அளித்து வருகின்றன. இருந்த போதிலும் பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கு மட்டும் இதுவரை எந்த மாநில அரசும் அனுமதி வழங்காமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் பீகாரில் பள்ளி , கல்லூரிகளைத் திறக்க அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அனுமதி வழங்கியுள்ளார். பள்ளி திறப்புக்கு முன்பாக ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அதே போன்று 50 சதவீத இருக்கைகளுடன் உணவகங்களை திறக்கவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று நடைபெற்ற கரோனா ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு, 50% வருகையுடன் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்கலாம் எனவும், பள்ளிகளை பொறுத்தவரையில், 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், அரசு பயிற்சி நிறுவனங்கள் 50% வருகையுடன் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.