பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ்குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார்.
இதனிடையே, விரைவில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர்.
நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்தும், இந்தியா கூட்டணியில் இருந்தும் விலகியதுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே (28.01.2024) பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார். மேலும், அவருடன் எட்டு பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். கடந்த 18 மாதங்களில் இரண்டாவது முறையாக அணி மாறியுள்ள நிதிஷ்குமார், தற்போது ஒன்பதாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, பீகார் மாநில சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில், பா.ஜ.க - 78, நிதிஷ்குமாரின் ஜே.டி.யூ - 45, ஹெச்.ஏ.எம்.எஸ் - 4 என நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக 127 வாக்குகள் பெறப்பட்டன. மேலும், ஆர்.ஜே.டி -79, காங்கிரஸ் -19, இடதுசாரி - 16 என எதிர்க்கட்சிகளுக்கு 112 வாக்குகள் பெறப்பட்டன. இதன் மூலம், நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வாக்கெடுப்பின் வெற்றிக்கு முன்னதாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் சட்டசபையில் பேசினார். அப்போது அவர், “நாங்கள் நிதிஷ்குமாரை ஒரு குடும்ப உறுப்பினராக நினைத்தோம். நிதிஷ்குமார் முன்பு பா.ஜ.கவை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார். இப்போது அவர்களை புகழ்ந்து கொண்டிருக்கிறார். மீண்டும் நிதிஷ்குமார் வேறு அணிக்கு மாறமாட்டார் என்பதை பிரதமர் மோடியால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா?. நிதிஷ்குமார் மோடிக்கு எதிராக உயர்த்திய போர்க்கொடியை இனி நான் ஏந்துவேன்” என்று கூறினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று (02-03-24) பீகார் மாநிலத்துக்கு சென்றார். பீகாரின் அவுரங்கபாத் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி ரூ. 21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், “பிரதமர் மோடி பீகார் வந்ததற்காக அவரை நாங்கள் வரவேற்கிறோம். பீகார் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து வருவதால் முன்னேற்றங்களை அடைந்து வருகின்றன. பீகார் வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன். பீகார் மக்கள் இப்போது பொருளாதார ரீதியாக அதிக அதிகாரம் பெற்றவர்களாக உணருவார்கள். வரும் லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இனி நான் எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன். நான் உங்களுடன் தான் இருப்பேன். வேறு எங்கேயும் செல்லமாட்டேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன்” என்று கூறினார். அப்போது பிரதமர் வாய்விட்டுச் சிரித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.