இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 31 ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தநிலையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது மத்திய அரசை கடுமையாக தாக்கிய ராகுல் காந்தி, "இந்தியா மாநிலங்களின் ஒன்றியம். இந்தியா மன்னராட்சி நாடு அல்ல எனக் கூறியதுடன் நீதித்துறை, தேர்தல் ஆணையம், பெகாசஸ் ஆகியவை ஒன்றியத்தின் குரலை நசுக்கும் கருவிகள் என்று அவர் கூறினார். மேலும் மாநிலங்களுக்கான உரிமை குறித்தும் ராகுல் காந்தி பேசினார்.
இந்தநிலையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, ராகுல் காந்தி தனது உரையின் மூலம் மக்களை தூண்டிவிட்டுள்ளதாக கூறி, மக்களவையில் உரிமை மீறல் மற்றும் அவை அவமதிப்பு நோட்டிஸுகளை வழங்கியுள்ளார்.