கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின் போது, எல்.ஐ.சி, ஐ.டி.பி.ஐ உள்ளிட்ட நிறுவனங்களில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை தனியாருக்கு விற்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது.
மத்திய அரசுக்கான நிதி திரட்டும் நடவடிக்கையாக இந்த விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற அச்சம் எல்ஐசி ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்களுக்கும் எழுந்துள்ளது. இதன் காரணமாக எல்.ஐ.சி ஊழியர்கள் போராட்டமும் மேற்கொண்டனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "எல்ஐசியில் அரசுக்கு சொந்தமான பங்குகளில் குறிப்பிட்ட ஒரு பகுதி பங்குகளை மட்டுமே விற்பனை செய்கிறோமே தவிர, இதனால் அதன் நிர்வாகத்தில் எந்தவித மாற்றங்களும் வராது. அரசு நிறுவனமாகவே அது தொடரும்" என தெரிவித்துள்ளார்.