இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனையொட்டி நாட்டில் கரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். ஒமிக்ரான் பாதிப்பால் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், கரோனா மூன்றாவது அலை தொடர்பாக இந்தியர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்தியாவில் ஒமிக்ரானால் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவர் கூறியுள்ளதாவது: ஒமிக்ரான் அதிகரித்து வருவதால் அடுத்த சில வாரங்கள் முக்கியமானதாக இருக்கும். பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்பே இருக்குமென்பதால், பீதியடையாமல் கரோனா பரவலை கையாள வேண்டும்.
கரோனா பரிசோதனை நடத்துங்கள், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துங்கள், தேவையற்ற மருந்துகளைத் தவிருங்கள், முகக்கவசங்கள் அணியுங்கள், முடிந்தால் வீட்டில் இருந்தே பணியாற்றுங்கள், கூட்டத்தைத் தவிருங்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள், அரசாங்கத்தின் அறிவுரையை பின்பற்றுங்கள். இவ்வாறு சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.