இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 63ம் ஆண்டு கூட்டம் செப்டம்பர் 12 டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது நிதின் கட்கரி பேசுகையில், “டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க வேண்டும். இது தொடர்பாக இன்று(12-09-2023) மாலை நிதியமைச்சரிடம் கடிதம் கொடுக்க உள்ளேன். மேலும், டீசலுக்கு குட்பை சொல்லுங்கள். தயவு செய்து டீசல் கார்கள் தயாரிப்பை நிறுத்திவிடுங்கள். இல்லையென்றால், டீசல் கார்களை விற்பதற்கு சிரமமாகிவிடும் அளவுக்கு வரியை அதிகப்படுத்துவோம்” என பேசினார்.
இவரின் பேச்சு சர்ச்சையாகி விமர்சனங்கள் எழத் தொடங்கியது. இந்த நிலையில், அமைச்சர் நிதின் கட்கரி தனது எக்ஸ் சமூகவலைத்தளப் பக்கத்தில், “டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10% ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வருகிறது. இதனை உடனடியாக தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசாங்கத்தின் பரிசீலனையில் தற்போது அத்தகைய முன்மொழிவு எதுவும் இல்லை. மேலும், 2070க்குள் கார்பன் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், ஆட்டோமொபைல் விற்பனையில் விரைவான வளர்ச்சியை அடைய வேண்டும். இதற்கு ஏற்ப, தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளுக்கு தகவமைத்துக் கொள்வது அவசியம். அந்த வகையான மாற்று எரிபொருட்கள் இறக்குமதியில், எரிபொருட்களானது மாற்றுள்ளதாகவும், செலவில் குறைந்தும் இருக்க வேண்டும். இதனுடன், மாசில்லாததாகவும், சுதந்திரமாக இயங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சி.ஏ.ஜி. அறிக்கை வெளியாகி, விரைவுச் சாலை போடுவதில் ஊழல் நடந்துள்ளது என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன விஷயத்தை மறுத்து அப்படியான திட்டம் எதுவும் இல்லை எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.