
இந்தியாவில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதுநாள் வரை மத்திய அரசிடமிருந்து மட்டுமின்றி, தனியாகவும் தடுப்பூசி கொள்முதலில் ஈடுபட்டனர். தடுப்பூசி தட்டுப்பாட்டால் பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி கொள்முதலுக்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரின.
இருப்பினும் தடுப்பூசி நிறுவனங்கள் மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளைத் தர மறுத்துவிட்டன. இதன் காரணமாகவும், தடுப்பூசியை வாங்குவதால் நிதி சுமை ஏற்படுவதாக தெரிவித்தும் பல்வேறு மாநிலங்கள், மத்திய அரசே தடுப்பூசியைக் கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தன. கேரளா அரசு தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டுமென்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. உச்ச நீதிமன்றமும் மத்திய அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தியது.
இதனையடுத்து பிரதமர் மோடி, ஜூன் 21 (இன்று) முதல் தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்குமென்றும், தடுப்பூசிக்காக மாநிலங்கள் இனி தனியாக செல்ல வேண்டியதில்லை எனவும் இம்மாத தொடக்கத்தில் அறிவித்தார். அதன்படி இன்று முதல் மத்திய அரசே மாநிலங்களுக்குத் தடுப்பூசி வழங்கவுள்ளது.
இந்தநிலையில் அகமதாபாத்தில் தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அரசே மாநிலங்களுக்குத் தடுப்பூசி வழங்க இருப்பது கரோனாவிற்கெதிரான போராட்டத்தில் புதிய கட்டம் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "பிரதமர் மோடியின் தலைமையில், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புதிய கட்டம் இன்று தொடங்குகிறது. ஜூன் 21 முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்துமென்றும், தடுப்பூசி போடுவதற்கான செயல்முறை விரைவுபடுத்தப்படும் என்றும் பிரதமர் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார்" என கூறியுள்ளார்.