34-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான புதிய ஜிஎஸ்டி முறை அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக 33-வது ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி நடந்தது. அதில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவிகிதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கு 1 சதவிகித ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டிருந்தது. இதனை அமல்படுத்துவது தொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, பழைய வரி விகிதம் அல்லது இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய வரி விகிதம் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் கட்டுமான நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பு தொடங்கப்படும் கட்டுமானப் பணிகளுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு தொடங்கப்படும் கட்டுமானப் பணிகளுக்கு குறைவான புதிய ஜிஎஸ்டியே நடைமுறைப்படுத்தப்படும் என வருவாய்த்துறை செயலர் பாண்டே தெரிவித்துள்ளார்.