Skip to main content

புதிய கல்விக் கொள்கையில் 'மும்மொழிக் கொள்கை'... விருப்ப மொழியாக 'சமஸ்கிருதம்' -மத்திய அரசு தகவல்!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

new education policy ... Sanskrit as the preferred language in school and higher education-Central Government Information !!

 

புதிய கல்விக் கொள்கை மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்க மத்திய அமைச்சர்கள் செய்தியளர்களைச் சந்தித்தனர்.

கடந்த 34 ஆண்டுகளாகக் கல்விக்கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ரமேஷ் போக்ரியால், பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அளித்து வருகின்றனர். இதில் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தும் முறை பற்றி மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே விளக்கினார்.

முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக் கொள்கை நடைமுறையில் இருக்கும். இரண்டாம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறையில் இருக்கும். 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை இருக்கும். உயர்கல்வி படிப்புகள் விடுப்பு எடுத்து மீண்டும் படிக்கலாம். பொறியியல் போன்ற உயர் படிப்புகளில் மாணவர்கள் வருடக்கணக்கில் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பைத் தொடரலாம். 15 ஆண்டுகளில் இணைப்பு கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும். M.phil  படிப்புகள் நிறுத்தப்படும். உயர் கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும். நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தைக் கல்வித்துறைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

படிப்பறிவு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்புக் கல்வி மண்டலங்கள் அமைக்கப்படும். இந்திய மொழிகளுக்கான இலக்கிய, அறிவியல்பூர்வ வார்த்தைகளைக் கண்டறிய கவனம் செலுத்தப்படும். 

மனிதவளத்துறை அமைச்சகம் கல்வித் துறை அமைச்சகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படுகிறது. தொன்மையான மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசியக் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். இணையவழிப் பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். டிஜிட்டல் நூலகங்களும் தொடங்கப்படும். மாநில மொழிகளில் கல்வி கற்பிக்க இணையத்தளம் மூலம் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் எளிதாகக் கல்வி கற்க புதிய மென்பொருள் வசதிகள் ஏற்படுத்தப்படும். புதிய கல்விக் கொள்கையில், மூன்று வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும். குழந்தைகளுக்கு எளிதான வழிமுறைகள் மூலம் ஆரம்பக் கல்வி கற்பிக்கப்படும். புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஆறாம் வகுப்பு முதல் தொழில்முறைக் கல்விகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும். பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமலில் இருக்கும் எனப் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான கல்விமுறை இருக்கும். அதேபோல் செயற்கை நுண்ணறிவு முறையில் மாணவர்களின் ரேங் கார்டு தயார் செய்யப்படும். ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

http://onelink.to/nknapp


புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருத மொழி ஒரு விருப்பமொழியாக இருக்கும். சமஸ்கிருதம் மட்டுமல்லாமல் இதர தொன்மைவாய்ந்த மொழிகளும் வழங்கப்படும். மும்மொழிக் கொள்கை இருந்தாலும் எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்