
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள சுனில் அரோரா ஓய்வு பெறுவதால், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா (வயது 63) நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, அவர் நாளை (13/04/2021) இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்க உள்ளார். அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
சுஷில் சந்திரா இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக 2022- ஆம் ஆண்டு மே 14- ஆம் தேதி வரை பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மத்திய நேரடி வரி வாரியத்தின் (Central Board of Direct Taxes) தலைவராகப் பதவி வகித்தார். பின்னர், கடந்த 2019- ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட சுஷில் சந்திரா, 10 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பணியாற்றியுள்ளார் குறிப்பிடத்தக்கது.
சுஷில் சந்திரா பதவிக் காலத்தில் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது. குறிப்பாக, இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 14- ஆம் தேதியுடன் முடிவடைகிறது நினைவு கூறத்தக்கது.