Never seen a Prime Minister behave so badly in Parliament  Rahul Gandhi

கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக நடைபெறவில்லை. நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

Advertisment

இதனிடையே எம்.பி பதவியை மீண்டும் பெற்றதையடுத்து ராகுல் காந்தி கடந்த 7 ஆம் தேதிநாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். மேலும் எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு துணைத் தலைவர் கௌரவ் கோகாய் எம்.பி. விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். நேற்று முன்தினம் ராகுல் காந்தி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது பேசினார்.

Advertisment

அதே சமயம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் பதிலளித்துப் பேசினர். இதையடுத்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து யாரும் குரல் கொடுக்கவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் அவையிலிருந்த அனைவரும் குரல் எழுப்பினர். குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒட்டுமொத்தமாகத் தோல்வியில் முடிந்தது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசனை தான் கூற முடியும். பிரதமர் தான் இதற்குத்தீர்வு காண முடியும். மணிப்பூர் விவகாரத்தைப் பிரதமர் மோடி நகைப்புக்குரியதாகக் கருதக்கூடாது. மணிப்பூர் குறித்து நேற்று பிரதமர் மோடி 2 நிமிடம் மட்டுமே பேசினார். மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி பேசியது இந்திய தாயை கொன்றதற்கு சமம். நாடாளுமன்றத்தில் நாங்கள் மணிப்பூர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினோம். அதற்கு பதிலளிக்காத பிரதமர்நகைச்சுவை தான் செய்தார். பிரதமர் கட்டாயம் மணிப்பூர் செல்ல வேண்டும்.

மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்து பிரதமர் சிரிப்பது வெட்கக் கேடானது. மணிப்பூர் செல்லாமலேயே அதைப்பற்றி பேசுவது எப்படி. மத்திய அரசு நினைத்திருந்தால் மணிப்பூர் கலவரத்தை நிறுத்தி இருக்கலாம். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய ராணுவம் 2 நாட்களில் மணிப்பூர் கலவரத்தை தடுத்திருக்கும். ஆனால், மணிப்பூர் கலவரத்தை தடுக்க பிரதமர் விரும்பவில்லை. என் அரசியல் அனுபவத்தில் எங்கும் கண்டிராத துயரங்களை மணிப்பூரில் கண்டேன். காங்கிரஸ் ஆட்சிக்கால பிரதமர்கள், பா.ஜ.க.வின் வாஜ்பாய், தேவகவுடா உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளதை பார்த்திருக்கிறேன்.

ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை.மோடி பிரதமரானதும், அவர் அரசியல்வாதியாக இருந்து விடுகிறார். அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்திய மக்களின் மனநிலை புரிந்து பிரதமர் பேச வேண்டும். 2024ல் மோடி பிரதமர் ஆவாரா என்பது கேள்வி அல்ல.மாதக் கணக்கில் மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தியா என்ற அடிப்படை மணிப்பூரில் கொல்லப்பட்டுள்ளது என்று நான் கூறியது உண்மைதான். மணிப்பூர் மாநிலத்தில் இந்தியாவின் அடிப்படை கருத்தியலை பா.ஜ.க. கொலை செய்துவிட்டது என நான் மீண்டும் கூறுகிறேன்” எனத்தெரிவித்தார்.