இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை எம்பி சு. வெங்கடேசன் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்திருந்தார். அதே போன்று நீட், யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை அளித்தார். அதோடு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தார். மேலும் நீட் மற்றும் யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்திருந்தார்.
இந்நிலையில் மக்களவையில் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகள் கோரிக்கை வைத்தனர். இதனை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார். அப்போது ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சி எம்பிகளின் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து, சபாநாயகருக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து நண்பகல் 12 மணி வரை மக்களவையை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
முன்னதாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். அதற்கு ராகுல் காந்தி நீட் தேர்வு தொடர்பான முறைகேடு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார். இதே போன்று மாநிலங்களவையிலும் மல்லிகார்ஜுன கார்கே நீட் தேர்வு விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் எழுப்பி, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் கோரிக்கை வைத்தார். இதனால் மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.