NEET exam malpractice issue; Central minister explanation

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (22.07.2024) காலை தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதனையொட்டி 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (23.07.24) தாக்கல் செய்ய உள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விவகாரம், நீட் தேர்வுக்கான வினாத்தாள் விற்பனை ஆகியவை குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி ஆகியோர் இன்றைய கேள்வி நேரத்தில் மக்களவையில் கேள்வி எழுப்பினர்.

அப்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “கடந்த 7 ஆண்டுகளாக வினாத்தாள் கசிவுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. நீட் தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தேசிய தேர்வு முகமை ஏற்படுத்தப்பட்ட பிறகு 240க்கும் மேற்பட்ட தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன என்பதை முழுப் பொறுப்புடன் என்னால் சொல்ல முடியும். நீட் தேர்வு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு அவசியம் என்று உச்ச நீதிமன்றமே இரண்டு முறை தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

NEET exam malpractice issue; Central minister explanation

Advertisment

அதே சமயம் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசுகையில், “நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்து முக்கிய தேர்வுகளிலும் மிகக் கடுமையான சிக்கல் உள்ளது என்பது நாடு முழுவதும் தெளிவாகத் தெரிகிறது. இந்திய தேர்வு முறை மோசடி ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக லட்சக்கணக்கான மாணவர்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதில் மிகுந்த அக்கறையுடன் உள்ளனர். நீங்கள் பணக்காரராக இருந்தால், உங்களிடம் பணம் இருந்தால், நீங்கள் இந்தியத்தேர்வு முறையை வாங்கலாம்” எனத் தெரிவித்தார்.