இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.
அதே சமயம், நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுத் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக இடையீட்டு மனுத் தாக்கல் செய்தனர் அதில், “நீட் தேர்வில் 650 முதல் 680 வரை என அதிக மதிப்பெண்கள் எடுத்த சுமார் 3.5 லட்சம் மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (22.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, சந்திர சூட் , “தரவுகள் அடிப்படையில் பார்த்தால் பிகார் மாநிலத்தின் பாட்னா உள்ளிட்ட இரண்டு இடங்களில் வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பரவியுள்ளதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.