இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.
இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (22.07.2024) தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதனையொட்டி 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (23.07.24) தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விவகாரம், நீட் தேர்வுக்கான வினாத்தாள் விற்பனை ஆகியவை குறித்தும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மக்களவையில் எழுப்ப உள்ளனர். அதன்படி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி ஆகியோர் இன்றைய கேள்வி நேரத்தில் எழுப்ப உள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.