Skip to main content

உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு; நீட் முடிவுகளை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
The National Examination Agency released the NEET results

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன. 

அதே சமயம், நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில் இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் கடந்த 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நீட் தேர்வு வினா - விடைகளை, மே 5ஆம் தேதி காலையிலேயே மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படியென்றால் மே 5ஆம் தேதிக்கு முன்பே யாரோ ஒருவர் அனைத்து வினாக்களுக்கும் விடையைத் தயார் செய்திருக்கிறார்.

இது உண்மையாக இருந்தால், மே 4ஆம் தேதி இரவே வினாத்தாள் கசிந்துள்ளது. இதில் 2 சாத்தியக்கூறுகள் உண்டு. ஒன்று, வங்கி லாக்கருக்கு அனுப்பிவைக்கும் முன்பே வினாத்தாள் கசிந்திருக்க வேண்டும். அல்லது தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும்போது கசிந்திருக்க வேண்டும். எனவே மே 3 - 5 தேதிகளுக்குள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதில் சரியாக எப்போது கசிந்தது என்பதுதான் கேள்வி” எனச் சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

மேலும் அவர், “நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட 19ஆம் தேதி மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.  மேலும், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று வரும் 20ஆம் தேதி பிற்பகல் வரை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட காலக்கெடு விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, மையங்கள் வாரியான நீட் தேர்வு முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்