Skip to main content

‘தாதாசாகேப் பால்கே’ முதல் ‘ஒத்த செருப்பு’ வரை... தேசிய விருதுகளைப் பெறும் தமிழ் நட்சத்திரங்கள்..!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

 National award winning Tamil filmmakers ...

 

டெல்லியில் விஞ்ஞான் பவனில் இன்று (25.10.2021) காலை 11 மணிக்கு 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களும் விருதுகளைப் பெற இருக்கின்றனர். திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கிறது.

 

அதேபோல், சிறந்த படத்துக்கான தேசிய விருதைக் கேரள நடிகர் மோகன்லாலின் 'மரைக்காயர் அரபிக்கடலின்டே சிங்கம்' படம் பெறுகிறது. நடிகர் தனுஷ் இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறவிருக்கிறார். ஏற்கனவே 2011ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆடுகளம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற நிலையில், 'அசுரன்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தனுஷுக்கு மீண்டும் தேசிய விருது வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதையும் வெற்றி மாறன் இயக்கிய 'அசுரன்' படம் பெறுகிறது. 'போன்ஸ்லே' இந்தி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மனோஜ் பாஜ்பாயிக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட இருக்கிறது.

 

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ‘மணிகர்ணிகா’, ‘பங்கா’ படங்களில் நடித்ததற்காக கங்கனா ரணாவத் பெற இருக்கிறார். 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட இருக்கிறது. ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே...' பாடலுக்காக இசையமைப்பாளர் இமான் சிறந்த இசையமைப்பாளர் விருது பெறவுள்ளார். சிறந்த ஜுரி தேசிய விருது ‘ஒத்த செருப்பு’ படத்திற்காக நடிகர் பார்த்திபனுக்கு வழங்கப்பட இருக்கிறது. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது ‘கே.டி’ படத்தில் நடித்த நாகா விஷாலுக்கு வழங்கப்பட இருக்கிறது. தேர்வான நடிகர்களுக்கு இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்குகிறார். விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.