தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் இன்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் மூணாறில் இருந்து கொச்சி மற்றும் தேனி செல்லும் சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து மதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக மூணாறு லக்கம் நீர்வீழ்ச்சி பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூணாறில் இருந்து உடுமலை செல்லக்கூடிய சாலை, மூணாறில் இருந்து தேனி, கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகளின் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் முழுமையாக சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட சாலை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களும் சிக்கியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. சாலையில் தேங்கிய மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் இடுக்கி மாவட்ட மீட்புப் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஏற்கனவே வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது கேரளாவின் மூணாறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.