மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் லண்டனில் பதுங்கியிருந்த நிரவ் மோடி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜயமல்லையா இந்திய வங்கிகளிடம் ரூபாய் 9000 கோடி கடன் பெற்று கொண்டு திருப்பி செலுத்தாமல், லண்டன் சென்றுள்ளார். இவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவிற்கு அழைத்து செல்ல அனுமதி வேண்டும் என இந்திய அரசு சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள் நிரவ்மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் எந்த சிறையில் அடைக்கப்படுவார், அங்குள்ள வசதிகள் என்ன என்று லண்டன் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக மும்பை சிறை நிர்வாகம் மாநில உள்துறைக்கு ஒரு பதில் அனுப்பியுள்ளது. அதில், ஆர்தர் ரோடு சிறையில் 12-ஆம் எண் செல்லில் 2 அறைகள் உள்ளன. இதில் ஒன்று நிரவ் மோடிக்கு தயாராக உள்ளது. நிரவ் மோடி, விஜய் மல்லையா ஆகிய இருவரையும் கூட அந்த ஒரே அறையில் அடைக்கலாம். 20 அடிக்கு 15 அடி கொண்ட அந்த அறையில் 3 மின்விசிறிகள், 6 டியூப் லைட்டுகள், 2 ஜன்னல்கள் உள்ளன. நிரவ் மோடிக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் 3 சதுர மீட்டர் இடம் கிடைக்கும்.
ஐரோப்பிய விதிகளின்படி அவருக்கு பருத்தி மெத்தை, தலையணை, போர்வை, படுக்கை விரிப்பு ஆகியவை வழங்கப்படும். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் புத்துணர்ச்சிக்காக அறைக்கு வெளியே அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை இந்திய அரசு மத்திய அமலாக்கத்துறை மூலம் லண்டன் நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்து, நிரவ்மோடியை இந்தியா அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.