கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே 336 மீட்டரில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்தது. இது தொடர்பாகச் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்தது. அதில், “தற்போதுள்ள அணைக் கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆனதால் பாதுகாப்பு கருதி புதிய அணைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அணைக் கட்டிய பின்னர் தமிழகத்திற்கு தற்போது வழங்குவதைவிட அதிக தண்ணீரை வழங்க முடியும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த விண்ணப்பம் தொடர்பாக நேற்று (28.05.2024) மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காகப் பட்டியலிடப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான டெல்லியில் நேற்று நடக்க இருந்த கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதே சமயம் முல்லைப் பெரியாரில் புதிய அணை, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்கள் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய உள்ளது எனத் தமிழ்நாடு நீர்வளத்துறைத் தெரிவித்துள்ளது. மத்திய நீர்வள தலைமை பொறியாளர் தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது. புதிய அணை கட்ட கேரள அரசு அனுமதி கோரியது சர்ச்சையான நிலையில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்று கேரள அரசு கூறி வந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது. அதே சமயம் பேபி அணைப் பகுதியைப் பலப்படுத்தி அணையின் நீரைமட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது.
அந்த தீர்ப்பின் அடிப்படையில் அணையைக் கண்காணிப்பதற்காக மூன்று பேர் மற்றும் ஐந்து பேர் கொண்ட இரு குழுக்களை உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது. இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூவர் குழுவில் தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைக்கப்பட்டது. இக்குழு அணையின் பருவகால சூழலின் அடிப்படையில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி (18.03.2024) ஆய்வுக் குழு அணையை ஆய்வு செய்ய முடிவு செய்திருந்தது. அச்சமயம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.