Skip to main content

“வாக்குகளுக்காக பிரியங்கா காந்தியை பொய் சொல்ல வைக்கின்றனர்” - ம.பி. முதல்வர்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

 MP Chief Minister says They make Priyanka Gandhi lie for votes

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை நேற்று (9ம் தேதி) தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். 

 

இந்நிலையில், 5.06 கோடி  வாக்காளர்களையும், 230 சட்டப்பேரவைகளையும் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான பிரச்சாரத்தை தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் இன்னும் தீவிரப்படுத்தியுள்ளன. அதன்படி காங்கிரஸ் சார்பில் நேற்று முன் தினம் (12-10-23) மத்தியப் பிரதேசம் மாநிலம், மாண்ட்லா மாவட்டத்தில் அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கலந்துகொண்டு பேசினார். அதில் அவர் சாதிவாரி கணக்கெடுப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தார். 

 

இந்த நிலையில், காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி கொடுத்த வாக்குறுதிகள் தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “முன்பு நேரு குடும்பத்தினர் மக்கள் அனைவரையும் ஏமாற்றி வந்தனர். ஆனால், முன்னாள் முதல்வர் கமல்நாத் இப்போது நேரு குடும்பத்தை ஏமாற்ற தொடங்கிவிட்டார். பிரியங்கா காந்தி பேசிய வீடியோவைப் பார்த்தேன். பொதுக்கூட்டத்தில் வாக்குறுதிகள் குறித்து பிரியங்கா காந்தி பேசிக்கொண்டிருந்தார். அப்போது கமல்நாத், அவர் அருகில் சென்று சில திருத்தங்களை கூறினார். அதை கேட்டுக் கொண்ட பிரியங்கா காந்தி திருத்திக் கொண்டு மீண்டும் வாக்குறுதிகளை அளித்துக்கொண்டிருந்தார். 

 

இதன் பிறகு, 1 - 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.1500 வரை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்று கூறினார். அப்போது உடனடியாக கமல்நாத் அவர் அருகில் சென்று மீண்டும் சில திருத்தங்களை எடுத்துக் கூறினார். இதையடுத்து, அந்த உதவித்தொகை வருடத்திற்கு ஒருமுறை அல்ல. மாதந்தோறும் அளிக்கப்படும் என்று பிரியங்கா அறிவித்தார். 

 

பிரியங்கா பேசுவதற்கு அளிக்கப்பட்ட குறிப்பு காகிதத்தில் தவறுதலாக இடம்பெற்றிருக்கிறது. அதன் பின்பு, விளக்கம் அளிக்கப்பட்டு திருத்திக்கொண்டு வாக்குறுதிகளை அளித்துள்ளார். தேர்தல் வாக்குறுதி தொடர்பாக கூட காங்கிரஸ் தயாராகவில்லை. காங்கிரஸ் கட்சியினர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை அழைத்து வந்து வாக்குகளுக்காக பொய் சொல்ல கட்டாயப்படுத்துகின்றனர். ஏனென்றால், அவர்கள் அளித்த வாக்குறுதிகளை எப்படியும் நிறைவேற்றப் போவதில்லை என்று அவர்களுக்கே தெரியும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்று தெரிந்து தான் காங்கிரஸ் கட்சியினர் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“அரசியலமைப்பு மீதான தாக்குதல்” - கன்வார் யாத்திரை உத்தரவுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Priyanka Gandhi Condemns Kanwar Yatra Order!

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டின் ஜூலையில் இருந்து ஆகஸ்ட் வரையிலான கன்வார் யாத்திரையை இந்துக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் நடத்துவார்கள். அதன்படி, கன்வார் யாத்திரை வரும் ஜூலை 22ஆம் தேதி தொடங்க உள்ளது. 

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் வகையில் பலகைகள் வைக்க வேண்டும் என்று ஹரித்வார் காவல்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த யாத்திரையை மேற்கொள்பவர்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

உ.பி அரசின் உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சாதி, மத அடிப்படையில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரான குற்றமாகும். இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற்று, பிறப்பித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜாதி, மதம், மொழி அல்லது வேறு எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதியளிக்கிறது. உத்தரபிரதேசத்தில் வண்டிகள், கடைகளின் உரிமையாளர்களின் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என்ற பிரித்தாளும் உத்தரவு நமது அரசியலமைப்பு, நமது ஜனநாயகம் மற்றும் நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தின் மீதான தாக்குதலாகும்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“படித்து பட்டம் பெறுவதை விட பஞ்சர் கடை வைக்கலாம்” - பா.ஜ.க எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
BJP MLA's controversial speech in madhya pradesh

நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் ‘பிரதமர் சிறப்புக் கல்லூரி’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும் இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க எம்.எல் ஏ ஒருவர், மாணவர்களிடம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேசம் மாநிலம், குணா மாவட்டத்தில் இந்த புதிய கல்லூரியில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அந்த தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ பன்னாலால் ஷக்யா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நாம் இன்று பிரதமர் சிறப்பு கல்லூரியைத் திறக்கிறோம். இந்தக் கல்லூரிப் பட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அதற்குப் பதிலாக, குறைந்த பட்சம் மோட்டார் சைக்கிளுக்கு பஞ்சர் பார்க்கும் கடையை வைத்தால் உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும்” என்று கூறினார். பா.ஜ.க எம்.எல்.ஏவின் இந்தச் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.