மருத்துவமனையில் ஐசிஐ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வடமாநில பெண்ணின் குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த அப்பெண்ணின் நான்கு குழந்தைகளும் வெளியில் தவித்துக் கொண்டிருந்தனர். பராமரிக்க யாரும் இல்லாததால் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக அங்கு வந்த எர்ணாகுளம் நகர காவல்துறையைச் சேர்ந்த பெண் போலீசார் குழந்தைகளை தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொண்டனர். அந்த நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை நான்கு மாத குழந்தையாகும். மற்ற மூன்று குழந்தைகளுக்கு பெண் போலீசார் உணவு வாங்கி வந்து கொடுத்தனர். ஆனால் நான்கு மாத குழந்தைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அப்பொழுது அதே காவலர் குழுவில் இருந்த ஆர்யா என்ற பெண் காவலர் அழுது கொண்டிருந்த நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். இதனை காவல் ஆய்வாளர் ஆனி என்பவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டார். பெண் காவலரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பெண் காவலர் ஆர்யாவிற்கு ஒன்பது மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், பணிக்காக வந்த இடத்தில் வடமாநில பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டி பராமரித்த அவரது செயல் பல தரப்பிலிருந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.