Skip to main content

அறுந்து விழும் குஜராத் மோர்பி பாலம்; பதற வைக்கும் சிசிடிவி காட்சி

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

Morbi Cable Bridge Collapse cctv  FOOTAGE

 

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள மோர்பி என்ற இடத்தில் மச்சு ஆற்றுக்கு மேல் தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தொங்கு பாலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 230மீ நீளமுடைய இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு 140 வருடங்களுக்கு மேல் ஆகிறது. கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாலம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகப் பாலத்தின் கேபிள்கள் சரி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், 4 நாட்களுக்கு முன்புதான்  இந்த பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

 

இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை 6 மணி அளவில், 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்த சமயத்தில், பாலத்தில் இருந்த மக்கள் உற்சாகத்தில் ஓடி விளையாடியுள்ளனர். இதனால், அந்த தொங்கு பாலமும் ஆடத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், என்ன செய்வது என யோசிப்பதற்குள் அவர்களின் எடையைத் தாங்க முடியாத மோர்பி தொங்கு பாலம் திடீரென அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது.

 

அதன் பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த தேசியப் பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநிலப் பேரிடர் மீட்புப்படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கர விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் என்று தெரிகிறது. ஆனால், ஆற்றுக்குள் இன்னும் பலர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த விபத்து குறித்துப் பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பாலத்திற்கான தகுதிச் சான்றிதழை மாநகராட்சி வழங்காமலேயே பாலம் திறக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். 

 

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, “குஜராத் தொங்குபாலம் விபத்தில் என் நெஞ்சே வலிக்கிறது. ஒருபுறம் வலி நிறைந்த இதயம் இருந்தாலும், மறுபுறம் கடமைக்கான பாதையும் இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என வருத்தம் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில் மோர்பி தொங்கு பாலம் அறுந்துவிழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பார்ப்பவர்களைப் பதற வைக்கும் இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக எதிர்க்கட்சிகள் அனைவரும் வருந்துவார்கள்” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 PM Modi says Opposition parties will regret the Supreme Court verdict at electoral bond

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

முதற்கட்ட வாக்குப்பதிவானது, தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், மிசோரம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் உள்ள மொத்தம் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு உள்பட மாநிலங்களில் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் தொடங்க இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. 

அந்த வகையில், இந்தியா முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “தேர்தல் பத்திரங்கள் மூலம் நீங்கள் பணத்தின் வழியைப் பெறுகிறீர்கள். எந்த நிறுவனம் கொடுத்தது? எப்படி கொடுத்தார்கள்? எங்கே கொடுத்தார்கள்? அதனால்தான் நான் சொல்கிறேன், இனியாவது எதிர்க்கட்சிகள் நேர்மையாக நடந்து கொள்ள வெண்டும். தேர்தல் பத்திரங்களை ரத்து செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் அனைத்தும் வருந்தும்.

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற சட்டங்கள் ஏன் அரசால் கொண்டு வரப்படவில்லை. மாறாக, தேர்தல் கமிஷன் சீர்திருத்தங்கள் என அரசால் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தேர்தல் கமிஷனர்களாக்கப்பட்டனர். அந்த அளவில் எங்களால் விளையாட முடியாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எங்களின் அர்ப்பணிப்பு. நாட்டில் பலர் களமிறங்கியுள்ளனர். மிகவும் நேர்மறையான மற்றும் புதுமையான பரிந்துரைகள் வந்துள்ளன. இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு நிறைய நன்மை கிடைக்கும். 

துரதிர்ஷ்டவசமாக, இந்த நாட்களில், ஒரு வார்த்தையில் எந்த அர்ப்பணிப்பும் பொறுப்பும் இல்லை. ராகுல் காந்தியின் ஒவ்வொரு எண்ணமும், முரண்படும் பழைய வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும்போது, ​​இந்தத் தலைவர் பொதுமக்களை ஏமாற்றப் பார்க்கிறார் என்று நினைக்கிறார்கள். சமீபத்தில், ஒரு அரசியல்வாதி ‘வறுமையை ஒரே அடியில் அகற்றுவேன்’ என்று சொல்வதைக் கேட்டேன். 5-6 தசாப்தங்களாக ஆட்சியில் இருக்க வாய்ப்பு கிடைத்தவர்கள், இப்படிச் சொல்லும்போது, ​​இந்த மனிதன் என்ன சொல்கிறார் என்று நாடு நினைக்கிறது?” என்று கூறினார். 

Next Story

'பாஜகவைப் புறக்கணியுங்கள்' - குஜராத்தில் வார்னிங் !

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
'Ignore BJP' - Warning to BJP in Gujarat

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தநிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பேசிய பேச்சு ஒரு சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வேட்பாளரை மாற்ற வேண்டும் என ராஜ்புத் சமூக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா அண்மையில் பேசும் போது, 'ராஜ்புத் சமூக ராஜாக்கள் ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் நெருக்கமாக இருந்தனர்' என பேசியது அந்த சமூக மக்களிடையே சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

NN

இது சர்ச்சையான நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்ததால் தனது பேச்சுக்கு ரூபாலா மன்னிப்பு கோரி இருந்தார். இருப்பினும் ரூபாலாவின் மன்னிப்பை ஏற்க மறுத்த ராஜ்புத் மக்கள் அவரை மாற்றி விட்டு வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜகவிற்கு வலியுறுத்தல் கொடுத்துள்ளனர்.

ராஜ்புத் சமூகத்தின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று பாஜக தலைவர்களுடன் பலமணி நேரம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் பாஜகவின் சமரசத்தை ஏற்க ராஜ்புத் சமூக சங்கங்களின் நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். பாஜக வேட்பாளர் ரூபாலாவை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளதோடு, அவரை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் வசிக்கும் 22 கோடி ராஜ்புத் பிரிவினர் பாஜகவை புறக்கணிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சுமார் 25 லட்சம் மக்கள் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்களது எச்சரிக்கை பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மட்டுமின்றி ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் கணிசமாக ராஜபுத் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அதனால் அங்கும் பாஜகவுக்கு நெருக்கடி முற்றும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.