Skip to main content

“நிலவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும்” - இந்து மகாசபை தலைவர் சர்ச்சை கருத்து

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

"Moon should be declared as Hindu Rashtra" - Hindu Mahasabha leader's controversial opinion

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட்  23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது. பின்னர், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பெங்களூரில் உரையாற்றிய பிரதமர் மோடி, ரோவர் இறங்கிய புள்ளியை சிவசக்தி பாய்ன்ட் என அழைத்துப் பெயரிட்டார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்து மகாசபை தேசியத் தலைவர் சக்ரபாணி மகராஜ் என்பவர் புதியதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். 

 

அகில இந்திய இந்து மகாசபை தேசியத் தலைவராக இருக்கும் சுவாமி சக்ரபாணி மகராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவையும், அதனுடன் சில கருத்துகளையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் உள்ள கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஜிஹாதிகள் உரிமை கொண்டாடும் முன் நிலாவை இந்து ராஷ்டிரமாக அறிவித்து சிவசக்தி புள்ளியை தலைநகராக அறிவிக்க வேண்டும்” எனச் சொல்லியுள்ளார். 

 

"Moon should be declared as Hindu Rashtra" - Hindu Mahasabha leader's controversial opinion

 

ஞாயிற்றுக்கிழமையான ஆக. 27ம் தேதி அவரின் ட்விட்டர் பக்கத்தில், “சந்திரயான்-3 மிஷன் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, மற்ற சித்தாந்தங்கள், மதங்கள் அல்லது ஜிஹாதி பழக்கவழக்கம் கொண்ட நாடுகள் நிலவினை சொந்தம் கொண்டாடுவதற்கு முன், ‘இந்து ராஷ்டிரா’ என்று அறிவிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.  

 

மேலும், “நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஐ.நா.வின் முயற்சியுடன் நிலவினை இந்து ராஷ்டிராவாக இந்தியா அறிவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சந்திரயான்-3 விண்கலம் இறங்கிய இடத்திற்கு சிவ் சக்தி புள்ளி எனப் பெயரிட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. சிவசக்தி புள்ளியை, ‘சிவசக்தி தாம்’ என்றும் அழைக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். 

 

மேலும் சக்ரபாணி மகராஜ், “நிலவில் இந்து ராஷ்டிரம் அமைக்கப்பட்டு அதன் தலைநகராக சிவசக்தி புள்ளி உருவாக்கப்பட வேண்டும் என இந்து மகாசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சந்திரனில் காஸ்வா-இ-ஹிந்தை (மதக் கலவரங்களை) பிறர் மேற்கொள்ளாமல் இருக்க, நிலவினை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும். ஜிகாதி மனப்பான்மை கொண்ட எந்தவொரு நபரும் நிலவில் காலடி எடுத்து வைத்து தீவிரவாதம், அடிப்படைவாதம் அல்லது இஸ்லாமிய பயங்கரவாதத்தை பரப்புவதற்கு முன் இதனைச் செய்ய வேண்டும் என சர்ச்சையான வகையில் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்தச் சர்ச்சையான கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. 

 

அதேபோல், சக்ரபாணி மகராஜ், இந்து மதத்திலும் சிவ பெருமான் நெற்றியில் நிலவு இருந்துள்ளது. பண்டைய தொடர்பு நிலவினுடன் இருந்ததனால் அதனை சந்தா மாமா என்றும் அழைத்து வந்தோம். நிலவிற்கு பயணம் செய்ய வசதிகள் ஏற்பட்ட பின்னர், நிலவின் சிவசக்தி புள்ளியில் இந்து மகாசபாவால் சிவனுக்கும் சக்தி தேவிக்கும் ஒரு பெரிய கோவில் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்