Skip to main content

அன்று அதானி; இன்று மணிப்பூர்... செயல்படுமா நாடாளுமன்றம்?

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

Monsoon Session of Parliament manipur issue

 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று(20.7.2023) தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. 15 அமர்வுகள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு 30க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தமாக 25 நாட்கள் நடைபெற்ற இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒருநாள் கூட முழுவதுமாக நடைபெறாமல் அமளியால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தொடரில் ராகுல் காந்தி அதானி ஊழல் குறித்து ஹிட்டன்பெர்க் அறிக்கையை சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்களையும், பல்வேறு கேள்விகளையும் முன்வைத்தார். அதேபோல், இந்த விவகாரத்தில் கூட்டு விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. கூட்டத் தொடர் நடந்து வரும் நேரத்தில் ராகுல் காந்தி மோடி சமுகம் குறித்து பேசிய வழக்கில் குஜராத் சூரத் நீதிமன்ற அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியதைத் தொடர்ந்து எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்வி எழுப்பியதில் நாடாளுமன்றத்தில் அமளியானது. இப்படி தொடர்ந்து அமளியால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒரு விவாதமும் நடைபெறாமல் நிறைவடைந்தது. 

 

இந்த நிலையில்தான் தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடியுள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரம், ஒடிசா ரயில் விபத்து, விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை என பல்வேறு விசயங்கள் குறித்து கேள்வி எழுப்பவுள்ளது. கடந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளுக்குள் சில முரண்பாடுகள் இருந்த நிலையில் ஒன்றாக குரல் கொடுக்க முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது பாஜக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் என பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைந்து ஐ.என்.டி.ஐ.ஏ(INDIA) அணியை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் கேள்விகள் அனைத்தும் வலுவாக இருக்கும் எனத் தெரிகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடராவது முழுமையாகச் செயல்படுமா என்ற பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்