தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இன்று மும்பையில் உயிரிழந்த சூழலில், அவரது குடும்பத்திற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் ஒரு கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த இர்ஃபான் கான் 1988 ஆம் ஆண்டு 'சலாம் பாம்பே' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். சின்னதிரை, வெள்ளித்திரை என அனைத்திலும் தனது நடிப்பின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைச் சம்பாதித்து வைத்திருந்தார் இர்ஃபான் கான். பாலிவுட் மட்டுமல்லாமல் தென்னிந்தியத் திரைப்படங்கள், ஹாலிவுட் படங்கள் எனப் பல படங்களில் தன்னைச் சிறந்த நடிகராக நிரூபித்தவர் இவர். இந்தச் சூழலில் கடந்த மார்ச் 2018- இல் தனக்கு நியூரோஎண்டோகிரைன் என்ற அரியவகை புற்றுநோய் இருப்பதாகவும், அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் இர்ஃபான் கான் அறிவித்தார்.
இந்த அரியவகை புற்றுநோயுடன் கடந்த சில வருடங்களாகப் போராடிவந்த இர்ஃபான் கான், இதற்காகப் பிரிட்டன் மற்றும் இந்தியாவில் தொடர் சிகிச்சைகளைப் பெற்று வந்தார். இந்நிலையில், குடல் தொற்று ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்து இர்ஃபான் கான் மும்பையின் கோகிலாபென் திரிபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "இர்ஃபான் கானின் மறைவு சினிமா மற்றும் நாடக உலகிற்கு இழப்பாகும். வெவ்வேறு தளங்களில் அவர் செய்த பல்துறை நடிப்பால் அவர் நினைவுகூரப்படுவார். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுடன் உள்ளன. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" எனத் தெரிவித்துள்ளார். நடிகர் இர்ஃபான் கானின் மறைவிற்கு அரசியல்வாதிகள், உலக சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.