இந்தியாவில் கரோனா வேகமாக பரவிவரும் சூழலில், இது தொடர்பாக பிரதமர் மோடி, தென்கொரிய அதிபருடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.7 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85,000ஐ கடந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 5700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 166 பேர் உயிரிழந்துள்ளனர், 473 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, தென்கொரிய அதிபருடன் தொலைப்பேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இன்றளவிற்கு கரோனாவை மிகச்சிறப்பாகக் கட்டுப்படுத்தி, உலக நாடுகள் பலவற்றிற்கும் கரோனா தடுப்பில் முன்மாதிரி நாடாகத் திகழ்ந்து வருகிறது தென்கொரியா. ஜனவரி மாதம் அமெரிக்காவில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட அதே காலகட்டத்தில்தான் தென் கொரியாவிலும் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், தென்கொரியாவில் 10,000 பேர் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். துரித நடவடிக்கைகள், வேகமான பரிசோதனைகள் என அடுத்தடுத்த நடவடிக்கைகளைத் தென் கொரியா விரைந்து மேற்கொண்டு கரோனா பரவலை தங்கள் நாட்டில் பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் உடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார். கரோனா வைரஸ், உலகளாவிய சுகாதார அமைப்புகள் மற்றும் பொருளாதார நிலைமைக்கு ஏற்படுத்தியுள்ள சவால்கள் குறித்தும், இந்த தொற்றுநோயைச் சமாளிக்க தங்கள் நாடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.