இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் மாநிலம் நவ்ஷேரா பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். முன்னதாக நவ்ஷேரா சென்ற மோடி, அங்கு பணியிலிருந்தபோது இறந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர், “நான் ஒவ்வொரு தீபாவளியையும் எல்லைக்காக்கும் வீரர்களுடன் கொண்டாடுகிறேன். இன்று என்னுடன் கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்த்துக்களையும் உங்களுக்காகக் கொண்டுவந்திருக்கிறேன். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது இந்த படைப்பிரிவு ஆற்றிய பங்கை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமையடைகின்றனர். உங்களால் தான் நாட்டு மக்கள் நிம்மதியாக உறங்குகிறார்கள். நாட்டுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு ஒரு சிலருக்கே கிடைக்கிறது. இது மிகவும் அரிய வாய்ப்பு” என்று பேசினார்.