பிரதமர் மோடி ராஜஸ்தானில் உள்ள இந்திய ராணுவத்தினருடன் இன்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்.
நாடு முழுவதும் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து,இனிப்புகள் பரிமாறி தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். மேலும், கரோனா காரணமாக சில இடங்களில் எளிய முறையில் தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள லோங்கேவாலாவில் இந்திய ராணுவத்தினருடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடவுள்ளார். பிரதமரின் இந்த கொண்டாட்டத்தின்போது முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவத் தலைவர் எம்.எம்.நர்வனே, பி.எஸ்.எஃப் இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பிரதமருடன் கலந்துகொள்கின்றனர்.