ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள இலக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே இன்று இந்திய பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உரையாடினார்.
![modi and rajapakse met in hyderabad house](http://image.nakkheeran.in/cdn/farfuture/J_15Xh9puZ0DTWJPSvInXxIg3eLWeVnAWh9Vuu2Ltmk/1581152062/sites/default/files/inline-images/dxfbhxdfbhdfx.jpg)
கடந்த ஆண்டு இறுதியில் இலங்கை நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்திற்கு பிறகு அந்நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றார். இந்நிலையில் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார் அவர். இந்நிலையில் இன்று பிரதமர் மோடியுடன் அவர் நேரில் சந்தித்து பேசினார்.
ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராஜபக்சே, பின்னர் அங்கிருந்து ஹைதராபாத் இல்லத்திற்கு சென்று அங்கு பிரதமர் மோடியை சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள். நாம் பொதுவான பல பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம். நமது பிராந்தியத்தில் பயங்கரவாதம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு இரு நாடுகளுமே தகுந்த பதிலடியை கொடுத்துள்ளோம். இனியும் பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்போம்.
இன்றைய பேச்சுவார்த்தையில் இலங்கை உடனான கூட்டு பொருளாதார திட்டங்கள் குறித்தும், வர்த்தக மற்றும் முதலீட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்தோம். இருநாட்டு மக்களுக்கும் இடையேயான நேரடி தொடர்புகளை அதிகரிக்கவும், சுற்றுலாவை ஊக்குவிக்கவும் நாங்கள் விவாதித்தோம்" என தெரிவித்துள்ளார். மேலும் தமிழர்களுக்கு சம உரிமையும், நீதியும் கிடைக்க உறுதி செய்யுமாறு இந்தியா வந்துள்ள ராஜபக்சேவை பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.