![modi about calicut flight crash](http://image.nakkheeran.in/cdn/farfuture/yI9Yz0LrppSe7aOV641LAGln2q5iUHnhQV7NDvZNa1w/1596819258/sites/default/files/inline-images/fhgdfhf_1.jpg)
கேரள விமான விபத்தில் தன் அன்புக்குரியவர்களை இழந்தவர்களை எண்ணி, என் மனம் வருந்துகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 8.15 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்கு உள்ளானது. இந்தக் கோரவிபத்தில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 குழந்தைகள் உட்பட சுமார் 180 பயணிகளும், விமான ஊழியர்களும் இந்த விமானத்தில் பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த, சம்பவ இடத்திற்கு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு உடனே செல்ல உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கோழிக்கோடு விமான விபத்தால் வேதனையடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எனது பிரார்த்தனை இருக்கும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். அப்பகுதியில் நிலவும் சூழல் குறித்து கேரள முதல்வரிடம் பேசினேன். விரைவு நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.